கேள்வியும் நானே, பதிலும் நானே - வெ. இறையன்பு
புத்தகங்கள் பல வடிவத்திலும் பல பொருளும் கொண்டு எழுதுவதால் மட்டும் மேன்படாது எழுதும் கைகள் ஒங்கவேண்டுமென்றால் எழுதுகோலை வைத்திருக்கும் கைகள் வலிமையாக இருக்க வேண்டும் வலிமை என்பது உடல் வலிமை அல்ல வார்த்தைகளை வரிசைப்படுத்த வலிமை அந்த வலிமை கல்வியாலேயே வரும்.
2011 ஆண்டு உலகம் பல மாற்றங்களை கண்ட போதும், வீட்டில் பல பொருட்கள் பல மாறுதல் அடைந்த போதும், எந்த வித மறுத்தலும் இன்றி இருந்த தொலைக்காட்சியை ஆர்வமுடன் பார்த்த தருணம். மதியம் 3 மணி ஆனால் மட்மே தமிழில் பொதிகை நிகழ்ச்சி ஆரம்பமாகும். பல வண்ண நிகழ்ச்சிகளோ பல சிறப்பான நிகழ்ச்சிகளோ இல்லாமல் இருந்த அமைதியான தருணம். இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியாபாரம் எனும் போர்வைக்குள் ஒழியாமல் இருந்த காலங்கள்.
"கல்வி எவ்வாறு கற்க வேண்டும்" என்பதை ஒவ்வொருவரும் தனது அனுபவத்தின் மூலம் சொல்லிக் கொடுப்பதற்காக "கல்லூரி காலங்கள்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் இறையன்பு. அந்த நிகழ்ச்சியில் வண்ண விளக்குகளும் இல்லை, வண்ண நாற்காலிகளும் இல்லை. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அந்த நிகழ்ச்சியும், அதைக் கொண்டுசெல்லும் அவரும் — அவர்கள் அனுபவமே அந்த நிகழ்ச்சி. 8ஆம் வகுப்பு படிக்கும் எனக்கு, "இது எனக்கு எதற்கு?" என்ற யோசனை வந்தது. ஆனால் அந்த நேரத்தில் அந்த தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சி எதுவும் இல்லாததால், வேறு வழியில்லாமல் பார்த்தேன். அப்போது எனக்குத் தெரியவில்லை இவரை இவ்வளவு அறிய போகிறேன் என்று!
அதன்பின்பு வேறு எந்த வழியிலும் அவரைப் பற்றி அறியும் வாய்ப்பும் அமையவில்லை. நானும் அவ்வளவாக தொலைக்காட்சியில் கல்வி பயிற்சி குறித்து பார்ப்பது போன்ற மனநிலையிலும் இல்லை. 2021ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலாளராக புதிய ஒருவரை நியமித்தனர். அவரது பெயர் இறையன்பு என்று சமூக வலைத்தளங்களில் பார்த்தேனே தவிர, புகைப்படத்தை பார்க்கவில்லை. அன்றைய செய்தித்தாளைப் பார்த்தபோது தான் தெரிந்தது, அதே இறையன்புதான் என்று. பின்னர் அவர் எழுதிய பல புத்தகங்களை வாசித்தாலும், மிகவும் ஆழமாக மனதில் பதிந்தது எது என்றால், அது "கேள்வியும் நானே, பதிலும் நானே.” என்ற புத்தகம்.
கேள்விகள் பலவாக இருந்தாலும், அதன் பதில் நம்மிடம் தான் இருக்கிறது என்ற உண்மை பெரும்பாலும் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை. ஆனால் ஒரு பதிலை உணர்ந்து சொல்ல வேண்டுமெனில், ஆழ்ந்த புரிதலும், தெளிவான சிந்தனையும் தேவைப்படும். அந்த புரிதலுக்கு கல்வியே அடிப்படை. இந்த புத்தகம் முழுவதுமே கேள்விகளும் அதற்கு அவர் தரும் பதில்களும். ஒவ்வொரு பதிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு ஆழமானவை எடுத்துக்காட்டாக
1, எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!
2. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!
3. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மௌனத்தை…
4. சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.
5. எப்போது தவறுகள் மறைகின்றன?
அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!
இது வெறும் ஒரு புத்தகம் அல்ல; வாசிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் புதுப் புரிதல்களைத் தூண்டுகிற வாழ்க்கைப் பயணக் கையேடு போல.
நாம் பார்க்காத ஒரு மனிதனாலும் நமது கண்களில் கண்ணீரை நிரப்ப முடியுமென்பது அவரது பணி ஓய்வுநாளில் தான் அறிந்தேன். அதே செய்தித்தாள் ஆனால் இப்போது செய்தி வேறு, பணி ஓய்வுநாளிலும் இன்னும் புத்தகங்கள் தான் எழுதப் போகிறேன் என்று கூறி இனிமையாக விடையளித்து விட்டார். இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியாவிட்டாலும், அவரது சாதனைகளும் செயல்களில் உள்ள மரியாதையும் மிகவும் உயர்ந்தது.
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

Comments
Post a Comment